நடைபாதையில் இடையூறு சீமை கருவேல மரங்களை மார்க்சிஸ்ட் கம்யூ. அகற்றம்

குளித்தலை: ராஜேந்திரம் பெருமாள் கோயில் தெருவில் நடைபாதையில் இடையூறாக இருந்த சீமை கருவேல மரங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அகற்றினர். கரூர் மாவட்டம் குளித்தலை ராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திரம் வடக்கு கிராமம் பெருமாள் கோயில் தெருவில் பொதுமக்கள் செல்லும் நடைபாதையில் இடையூறாக சீமை கருவேல மரங்கள் அடர்ந்து புதர் போல் காட்சி அளித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சீமை கருவேலம் மரங்களை அகற்றும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேரடி களப் போராட்டம் என்று அறிவிப்பை வெளியிட்டு தாமாக முன்வந்து குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்து செல்வன் தலைமையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜீ, விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் சிவா, நிர்வாகிகள் இளங்கோவன், சுப்பிரமணியன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டதால் குளித்தலை போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: