என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு நிலங்களை சமன்படுத்த கடும் எதிர்ப்பு: 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிப்பு: தடுக்க முயன்ற பாமகவினர் கைது

சேத்தியாத்தோப்பு, மார்ச் 10: என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக நிலங்களை சமன்படுத்துவதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து கரிவெட்டி, கத்தாழை  ,மேல்வளையமாதேவி, உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம  மக்கள் தொடர்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே  வளையமாதேவி கிராமத்தில்  கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணியை என்எல்சி நிறுவனம் துவங்கியுள்ளது.  கடலூர் எஸ்பி ராஜாராம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்கள் உதவியுடன்  நிலங்களை சமன்படுத்தும் பணிகளை மேற்கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மயிலம் தொகுதி பாமக எம்எல்ஏ சிவக்குமார் தலைமையில் பாமகவினர் வளையமாதேவி கிராமத்துக்குள் போராட்டம் நடத்த நுழைய முயன்றனர். அவர்களை சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு அருகே தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரையும் கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் பாமகவினர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மெயின்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பாமகவினர், கிராம மக்கள் உள்ளிட்ட 50 பேரை போலீசார் அதிரடியாக  கைது செய்தனர்.

போராட்டங்களுக்கு இடையே நிலங்களை சமன்படுத்தும் பணி நடந்து வருவதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் கிராம மக்கள் தர்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, என்எல்சி  நிர்வாகத்துக்கு எதிராக கண்டன முழுங்களை எழுப்பி வருகின்றனர். மக்கள் எதிர்ப்பை மீறி நிலங்கள் சமன் செய்வதை எதிர்த்தும், என்எல்சி அடக்குமுறையை கண்டித்தும் கடலூர் மாவட்டத்தில் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: