குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசிமக பிரமோற்சவ விழா துவங்கியது

குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசிமக பிரமோற்சவ விழா துவங்கியது. மார்ச் 5ம்தேதி தேரோட்ட விழா நடைபெறுகிறது. சோழ நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரை தலங்களில் 2வது தலமாகவும் பிரம்மா, மகாவிஷ்ணு, முருகன், சப்த கன்னிமார்கள், அகத்தியர், கண்ணுவமுனிவர் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட பெருமை வாய்ந்தது, குளித்தலை கடம்பர் கோயில். முற்றிலாமுலை அம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவ விழா நேற்று (24ம் தேதி) தொடங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 6 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி தொடங்கியது. முதல் நாளான இன்று (25ம் தேதி) காலை 10:30 முதல் 12 மணிக்குள் ரக்ஷா பந்தனம் வருஷாப யாகம் இரவு 7 மணிக்கு சாமி மஞ்சள் கேடயத்தில் திருவிழா நடைபெறுகிறது.

2ம் நாள் பகல் பல்லக்கு இரவு 7 மணிக்கு மேல் நந்தி, யாழி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, 3ம் நாள் பகல் பல்லக்கு இரவு 7 மணிக்கு மேல் பூதம், அன்ன வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 4ம் தேதி 8ம் நாள் பகல் பல்லக்கு இரவு 7 மணிக்கு மேல் குதிரை வாகனம், 5ம் தேதி காலை ரதாரோஹணம் நிகழ்ச்சி நடைபெற்று காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மேல் நடராஜர் அபிஷேகம் நடைபெறுகிறது. 6ம் தேதி 10ம் நாள் நிகழ்ச்சியாக காலை 7 மணிக்கு நடராஜர் தரிசனம் திருவீதி உலா, 9 மணிக்கு மேல் 12 மணிக்குள் கடம்பர் கோயில் திருங்கோயிமலை சுவாமிகள் சந்திப்பு, மஞ்சள் நீராட்டு விழா, காவிரியில் தீர்த்தவாரி, 9ம் தேதி 13ம் நாள் அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. மார்ச் 9ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, மற்றும் சிவ  சிவானந்தா சத்யோஜாத சிவாச்சாரியார், உத்ஸவ ஆசார்யன் கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: