பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த எவர்சில்வர் உற்பத்தியாளர் சங்கத்தினர் சம்மதம்

திருப்பூர்,பிப்.24: பாத்திர தொழிலாளர்களுக்கான புதிய சம்பள ஒப்பந்தம் தொடர்பாக, தொழிற்சங்கத்தினருடன், பேச்சுவார்த்தை நடத்த எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்தனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் (சமரசம்) செந்தில்குமார் முன்னிலையில், பாத்திர உற்பத்தியாளர்கள், தொழிற்சங்கத்தினர் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்தை நடந்தது.ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையின் போது, உற்பத்தியாளர்கள் தரப்பில், தொழில் சரியாக இல்லாததால், ஓராண்டுக்கு பின்னர் கூலி உயர்வு குறித்து பேசிக்கொள்ளலாம். அதுவரை பழைய கூலியே வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். தொழிற்சங்கத்தினர் இதை ஏற்கவில்லை. இதையடுத்து, பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கு கடந்த 21ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சிறிது இறங்கி வந்த பித்தளை உற்பத்தியாளர் சங்கத்தினர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில், எவர்சில்வர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடந்தது. தொழிற்சங்கங்கள் தரப்பில், தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி தலைவர் வேலுச்சாமி (எல்பிஎப்), செயலாளர் ரங்கராஜ் (சிஐடியு),பொருளாளர் தேவராஜ் (ஏடிபி),துணை செயலாளர் செல்வராஜ் (ஏஐடியுசி), திருஞானம் (எச்எம்எஸ்), பாண்டியராஜ் (ஐஎன்டியுசி),சீனிவாசன் (பிஎம்எஸ்),அர்ஜீணன் (காமாட்சி அம்மன்) ஆகியோரும்,எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கம் தரப்பில் துரைசாமி (தலைவர்),மணி, மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ‘ஒரு வருடத்திற்கு பழைய கூலியை தான் தர முடியும் என பிடிவாதமாக கூறி வந்த எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், அதில் இருந்து இறங்கி வந்து தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இருதரப்பினர் இடையே வருகிற மார்ச் 2ம் தேதி அனுப்பர்பாளையத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: