சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்

கடலூர், அக். 1: சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 16ம் தேதி முதல் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. சவுக்கு சங்கரை பணிநீக்கம் செய்வதற்கான விளக்க நோட்டீசை, சிறையில் இருக்கும் அவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிறை அதிகாரிகளுடன் வழங்க சென்றனர். ஆனால் அந்த நோட்டீசை வாங்க சவுக்கு சங்கர் மறுத்துவிட்டார். இதைதொடர்ந்து அந்த விளக்க நோட்டீஸ் அவர் சிறையில் இருக்கும் அறை வாசலில் ஒட்டப்பட்டது.

இந்நிலையில், கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை சந்திக்க பார்வையாளர்கள் அதிகளவில் வருவதால் நேற்று முன்தினம் முதல் ஒரு மாத காலத்திற்கு சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் சந்திக்க தடை விதித்து மத்திய சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுக்கு சங்கர், சிறையின் உள்ளே உண்ணாவிரதம் இருக்க சிறை நிர்வாகத்திடம் கடிதம் வழங்கியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தை சிறை நிர்வாகத்தினர் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை முதல் சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: