என்ட் டூ என்ட் பஸ்கள் மீண்டும் கண்டக்டர் இல்லாமல் இயக்கம்

நாகர்கோவில், அக்.1 : நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே 20 என்ட் டூ என்ட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 4 குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் ஆகும். இந்த பஸ்கள் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. ஒவ்ெவாரு பஸ்சுக்கும் தினமும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் வசூல் வருகின்றது. முகூர்த்த நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் வசூல் அதிகமாக உள்ளது. நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே இரு மார்க்கத்திலும் காவல்கிணறு பகுதியில் மட்டும் தான் இந்த பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இடையில் வேறு எங்கும் இந்த பஸ்கள் நிற்காது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன், என்ட் டூ என்ட் பஸ்கள் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்பட்டன.

வடசேரி பஸ் நிலையத்தில் 4 கண்டக்டர்களும், திருநெல்வேலி பஸ் நிலையத்தில் 4 கண்டக்டர்களும் பணியில் இருப்பார்கள். பயணிகள் அனைவரும் ஏறி இருக்கைகள் நிரம்பியவுடன் கண்டக்டர்கள் ஏறி டிக்கெட் வழங்கி விட்டு இறங்கி விடுவார்கள். அதன் பின்னர் டிரைவர் மட்டும் பஸ்சை எடுத்து செல்வார். பின்னர் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு, கொரோனா கால கட்டம் என வந்ததால் இந்த பஸ்கள் கண்டக்டருடன் இயக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் இந்த பஸ்கள் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்பட உள்ளன. நாகர்கோவில் - திருநெல்வேலி இடையே இயங்கும் அனைத்து என்ட் டூ என்ட் பஸ்களுக்கும் இனி கண்டக்டர் கிடையாது.

பஸ் நிலையத்தில் வைத்தே டிக்கெட் கொடுக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இதற்கிடையே டிரைவர் மட்டும் பஸ்சை எடுத்து செல்வதால் பல்வேறு பிரச்னைகள் வர வாய்ப்பு உள்ளது. வசூல் குறையும். எனவே கண்டக்டருடன் தான் பஸ்கள் இயக்க வேண்டும் என்று மீண்டும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல போவதாகவும் கூறி உள்ளனர்.

Related Stories: