திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி ஆலோசனை கூட்டம்

திருப்பூர்,அக். 1:திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கி பேசினார். இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் சிவசங்கரி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் மற்றும் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியம், பொருளாளர் நட்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின்னர் இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா நிருபர்களிடம் கூறியதாவது: மாநில இளைஞரணி சார்பில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளோம்.

தமிழகத்தில் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்திற்கு அதிகமான வங்கி கடன் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் உதவிகள் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் தொழில் பெருகும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இ.கம்யூ, விசிக நிர்வாகிகள் கூட்டம்

திருப்பூர்,அக். 1:இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி ஆகிய கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வருகிற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் மனித சங்கிலி இயக்கம் நடத்துவது என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் மனித சங்கிலி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பூர் மாநகரம், அவினாசி, ஊத்துக்குளி, காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய இடங்களில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த மனித சங்கிலி இயக்கத்தில் அனைவரும் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்,  புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், புறநகர் மாவட்ட பொருளாளர் பழனிசாமி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி,  தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால், விடுதலை சிறுத்தை கட்சிகளின் திருப்பூர்  கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்  தமிழ் வேந்தன், திருப்பூர் தெற்கு பொறுப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

Related Stories: