ராமநாதபுரத்தில் நடப்பாண்டில் 6 லட்சம் பனை விதைகள் நட இலக்கு: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், அக். 1: தெற்குத்தரவை ஊராட்சி அம்மன் கோவில் ஊரணி, வைரவன் கோயில் பகுதிகளில் பனை விதை நடவு பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் துவக்கி வைத்து பேசுகையில், ‘‘கண்மாய், ஊரணி, நீர்வரத்து கால்வாய் கரையோர பகுதிகளில் பனை விதைகளை நடவு செய்து பராமரிக்கும் போது பனை மரங்கள் வளர்ந்து பல்வேறு பயன்கள் தருகின்றன. இந்த மரங்களால் கரைப்பகுதிகள் பலப்படுகின்றன. மண் அரிப்பு தடுக்கப்படும். தண்ணீர் பாதுகாக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க பனை மரங்கள் பாதுகாப்பு அரணாக உள்ளன. கிராம பகுதிகளில் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனுள்ள வகையில் இத்திட்டம் உள்ளது. நடப்பாண்டில் மாவட்டத்தில் 6 லட்சம் பனை விதை நடவு செய்து பராமரிக்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், மகளிர் குழுக்கள் ஆர்வம் காட்டினால் நடவு செய்த பனை விதைகளை மரங்களாக பாதுகாக்க முடியும்’’ என்றார். இதனை தொடர்ந்து தெற்குத்தரவை ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் துவக்க, நடுநிலை பள்ளிகளில் சமையல் அறை, காய்கறி தோட்டம் அமைக்கும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு துறைகள் சார்பில 36 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி திட்ட அலுவலர்கள் குமரேசன், பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுக பெருமாள், தெற்குத்தரவை ஊராட்சி தலைவர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: