மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 10 ஆயிரம் பேர் பயன் திருவாரூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்

திருவாரூர்,செப்.30: திருவாரூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவது குறித்து அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், நாகை எம்பி செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசுகையில், தமிழக முதல்வரின் உத்தரவுக்கு ஏற்ப இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. வரும் 10 ஆண்டுகளில் தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்றுவதற்கு முதல்வர் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் குடிசை வீடுகள் இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குடிசை வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதில் 44 ஆயிரத்து 65 பேர்களுக்கு வீட்டுமனை பட்டா தேவைப்படும் பட்சத்தில் இன்றைய தினம் (நேற்று) 2 ஆயிரத்து 488 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் 6 ஆயிரம் பேர்களுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் மீதமுள்ள 36 ஆயிரம் பேர்களுக்கும் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் வீட்டுமனைக்கான நிலத்தினை பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, நுகர்பொருள் வாணிபக் கழக முதல்நிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா, ஆர்டிஓக்கள் சங்கீதா, கீர்த்தனா மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: