நெய்வாசல்பட்டி பெரியகண்மாயில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது எப்படி?

புதுக்கோட்டை, செப். 30: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வன்னியம்பட்டி ஊராட்சியில், நெய்வாசல்பட்டி பெரிய கண்மாயில், பேரிடர் கால நண்பர்கள் மேம்படுத்துதல் திட்டத்தின்கீழ், பேரிடர் காலங்களில் நீர்நிலைகளில் சிக்கிய பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் ஒத்திகை நிகழ்வினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டார். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் வகையில், மத்திய அரசின் பேரிடர் கால நண்பர்கள் மேம்படுத்துதல் திட்டத்தின்கீழ், இரண்டாம் கட்டமாக புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தில் 100 தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்து 12 நாட்கள் பேரிடர் கால மீட்பு பயிற்சி திருமயம் வட்டம், வன்னியம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வன்னியம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள நெய்வாசல்பட்டி பெரியகண்மாயில் வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட நபர்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவும், அவர்களுக்கு முதலுதவி வழங்குவது தொடர்பாகவும், பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின்போது பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், பேரிடர்களிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

எனவே பொதுமக்கள் அனைவரும் வரக்கூடிய மழைக்காலங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பேரிடர்களிலிருந்து தங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்வில், புதுக்கோட்டை ஆர்டிஓ முருகேசன், தாசில்தார்கள் பிரவீணா மேரி (திருமயம்), சூரிய பிரபு (பேரிடர் மேலாண்மை) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: