கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி தொழில் முனைவோர் விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

திருவள்ளூர், செப்.29:  ஆத்மா நிர்பார் பாரத் அபியான்  தொகுப்பின் கீழ் ₹15 ஆயிரம் கோடி நிதியுடன் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி  உருவாக்கப்பட்டு, மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தனிப்பட்ட தொழில்முனைவோர், தனியார் நிறுவனங்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் பிரிவு-8 நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு, இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல் உள்கட்டமைப்பு, கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், தொழில் நுட்ப அடிப்படையிலான இனப்பெருக்க பண்ணைகள், கால்நடை மருத்துவ தடுப்பூசி மற்றும் மருந்து தயாரிப்பு அமைப்புகள், கால்நடை கழிவுகள் மேலாண்மை திட்டங்கள் மூலம் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் தொழில் முனைவோர்  விண்ணப்பிக்கலாம். பால் பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டிய பால் பொருட்களை உற்பத்தி செய்தல் அல்லது தற்போது உள்ள அலகுகளை வலுப்படுத்துதல். இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டு இறைச்சி பொருட்களை உற்பத்தி செய்தல் அல்லது தற்போது உள்ள அலகுகளை வலுப்படுத்துதல்.

கால்நடை தீவன உற்பத்தி அலகுகள் தொடங்குதல் அல்லது வலுப்படுத்துதல். தொழில்நுட்ப உத்திகளை கொண்டு கால்நடை இனங்களை மேம்படுத்துதல் மற்றும் இனப்பெருக்க பண்ணைகள் தொடங்குதல் மற்றும் கால்நடை மருத்துவ தடுப்பூசிகள் மற்றும் மருந்து உற்பத்தி அலகுகளை நிறுவுதல், கால்நடை, வேளாண்மை கழிவுகளை கொண்டு கழிவுகள் மேலாண்மை மூலம் வளமை பெற்ற பயன்பாட்டு பொருட்கள் உருவாக்குதல் போன்ற தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற, தனிப்பட்ட தொழில் முனைவோராகவோ, தனியார் நிறுவனங்கள் நடத்துபவரோ, விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், பிரிவு-8 நிறுவனங்கள் , குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றை சார்ந்தவராக இருக்க வேண்டும். மத்திய அரசு இத்திட்டத்தில் தொழில் முனைவோராகும் பயனாளிகளுக்கு 3 சதவிகிதம் வட்டி மானியம் மற்றும் கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது. கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு நிதியின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் மேற்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும், இத்திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகியும் உதவிகளை பெறலாம் என திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: