திருச்சி கே.கே.நகர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற டீக்கடை ஓட்டலுக்கு சீல்: உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை

திருச்சி, செப்.29: திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள டீக்கடை ஓட்டலுக்கு திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர். திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் கடையில் கடந்த 12.01.2022 அன்று தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் அந்த கடையில் 5.8.2022 அன்று ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த வணிக ஓட்டலுக்கு நேற்று சீல் செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில் திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.

Related Stories: