பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் கூடை முடையும் தொழிலாளர்கள்

கிராமப்பகுதிகளில் தினமும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய கூடை , கோழிகளை அடைத்து வைக்கும் பஞ்சாரம், குழம்பு, சோறு மூட உதவும் ஈச்சங்கூடைகள், காய்கறிக் கடைகளில் காய்கறி கொட்டி வைக்கும் தட்டு, பூஜைக்கூடைகள் ஆகியவற்றையும் பார்த்திருப்போம். இவை ஈஞ்சி மரத்தில் இருந்து செய்யப்படுகிறது. இந்த ஈஞ்சி மரங்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில், சேதுபாவாசத்திரம், தொடங்கி கட்டுமாவடி, மணமேல்குடி, அரசங்கரை உள்ளிட்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளில் விளைகிறது. கிராமப்பகுதிகளில் சிறுவயதில் வயல்காட்டு பகுதிகளுக்கு ஓனான், குருவி பிடித்து விளையாட செல்லும் சிறுவர்கள் வேலி ஓரங்களில் விளைந்து கிடக்கும் கருப்பு ஈச்சம் பழத்தை பிடுங்கி சாப்பிடுவது வழக்கம். அந்த முள் நிறைந்த ஈஞ்சி மரத்திலிருந்து தான் இந்த கூடைகள் தயார் செய்யப்படுகிறது. ஈஞ்சி மரத்தின் மட்டைகளை வெட்டி, கையை பதம் பார்க்கும் முள்ளை லாவகமாக சீவி, மட்டையின் தலைபாகத்தை வெட்டி அகற்றி விட்டு, மட்டையை பக்குவமாக ஒரே அளவில், மூன்று, நான்காக கிழித்து, காய வைத்து பதப்படுத்தி அது உலர்ந்து சரி பக்குவத்தில் வரும்போது ஈச்சங்கூடை உள்ளிட்ட கைவினைப் பொருட்களை தயார் செய்யப்படுகின்றது.

ஈச்சங்கூடை தயாரிப்பதற்காக பேராவூரணி பகுதிக்கு வந்துள்ள திருச்சி கல்லணை அருகே உள்ள நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி - மாரியம்மாள் தம்பதியர் கூறுகையில், பிழைப்புக்காக திருச்சி மாவட்டத்திலிருந்து வந்து ஈஞ்சி மரங்களில் கிளைகளை வெட்டி ஈச்சங்குடைகளை தயார் செய்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். வருடத்திற்கு ஒருமுறை மூன்று மாதங்களுக்கு, அதாவது ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இந்த ஈஞ்சி மரங்கள் நன்கு விளைந்து, கூடைகள் தயார் செய்யும் பக்குவ நிலையில் இருக்கும். இவற்றை தேடி வெட்டி எடுத்து பக்குவப்படுத்தி கூடை, பஞ்சாரம், தட்டுகளை தயார் செய்கின்றோம். ஈஞ்சி செடிகளுக்குள் பாம்புகள், விஷ ஜந்துக்கள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் இருக்கும். உயிரை பணயம் வைத்து தான், வயிற்றுப் பிழைப்புக்காக இவற்றை வெட்டிக் கொண்டு வந்து, பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

ஒரு நாளைக்கு அதிக அளவாக ஒரு நபர் மூன்று கூடைகள் பின்னுவோம். மொத்தமாக கடைக்காரர்களுக்கு, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வோம். கடைக்காரர்கள் தேடி வந்து வாங்கிச் செல்வார்கள். வெயில், மழை பார்க்காமல் நாங்களாக தெருக்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்தால் ரூ.250 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்வோம். உழைப்புக் கூலி, தயாரிப்பு என நாளொன்றுக்கு செலவு போக, நபர் ஒன்றுக்கு ரூ. 300 கிடைக்கும். இதை கொண்டு தான் குடும்பம் நடத்துகிறோம். இதற்காக பிள்ளைகளை உறவினர்கள் பொறுப்பில், படிப்பதற்காக விட்டு விட்டு இடம் மாறி வந்து மூன்று மாதங்கள் தொழில் செய்வோம் அரசு எங்களுக்கு மானியத்தில் தொழில் தொடங்க கடனுதவி செய்ய வேண்டும். எங்கள் தயாரிப்புகளை அரசே நல்ல விலை கொடுத்து கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் கூறியது. இயற்கை பொருட்களில் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடோடி குறவர் இனத்தைச் சேர்ந்த இம்மக்களின் வாழ்வாதாரம் காத்திடவும், இம்மக்கள் வாழ்வு மேம்படவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காலமெல்லாம் காட்டிலும் மேட்டிலுமாக நாடோடி வாழ்க்கை வாழும் இவர்களது வாழ்வு மேம்பட அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: