சொத்தை மாற்றிய வழக்கு அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை

துவரங்குறிச்சி செப்: 29: சொத்தை மாற்றிய வழக்கில் அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறைதண்டனை விதித்து மணப்பாறை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவார்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் (60). மணப்பாறை வடக்கு ஒன்றிய அதிமுக துணை செயலாளராக உள்ளார். இவரது மனைவி நிர்மலாதேவி. மாற்றுத்திறனாளியான இவர், அரசு பள்ளியில் ஆசிரியர். தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மற்றொரு பெண்ணான நிர்மலா தேவி (இவருக்கும் அதே பெயர்) என்பவரை 2வது திருமணம் செய்தார். இவர் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியான நிர்மலா தேவி தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் முதல் மனைவியான ஆசிரியை நிர்மலா தேவியின் பெயரில் மணப்பாறையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான இடத்தை தனது 2வது மனைவியும் நிர்மலாதேவிக்கு மாற்றியுள்ளார். 2 மனைவிகளுக்கும் ஒரே பெயர் என்பதால் ஆள்மாறாட்டம் செய்து (2வது மனைவியை முதல் மனைவியாக காண்பித்து) சந்திரசேகர் தனது பெயருக்கு 2018ம் ஆண்டு நவம்பரில் மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை மாற்றி பதிவு செய்தார்.

இந்த மோசடி குறித்து முதல் மனைவி நிர்மலாதேவி மணப்பாறை போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து மணப்பாறை போலீசார் சந்திரசேகர் மற்றும் அவரது 2வது மனைவி நிர்மலாதேவி ஆகியோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சந்திரசேகர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நிர்மலா தேவி மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட 2 பேர் என 4 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்றுமுன்தினம் வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருப்பசாமி, குற்றம் சாற்றப்பட்ட அதிமுக நிர்வாகி சந்திரசேகர் மற்றும் அவரது 2வது மனைவி நிர்மலா தேவி ஆகிய இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் சாட்சி கையெழுத்து போட்ட இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories: