பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு

சேலம், செப்.29: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இதன்படி சேலம் மாநகரத்தில் கமிஷனர் நஜ்முல்கோதா தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனம், கண்ணீர் புகைக்குண்டு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, ரயில்வே ஜங்சன் ஆகிய இடங்களில் அதிவிரைப்புடையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். கோயில்கள், மசூதிகள், தலைவர்களின் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட பாஜக அலுவலகம் மரவனேரியில் உள்ளது. அங்கும் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அதே போல மத்திய அரசு அலுவலகங்கள், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வகையில் மாநகர் முழுவதும் அனைத்து போலீசாரும் ரோந்து சுற்றி வருகின்றனர். அதே போல சேலம் மாவட்டம் முழுவதிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக யார் வந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: