நெல்லை கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் உள்ள அலுவலகம் இடமாற்றம்

நெல்லை, செப்.28: நெல்லை கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் நூற்றாண்டு பழமையான கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்ததை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட மகளிர் திட்ட அலுவலக பொருட்களை ஊழியர்கள் மாற்று இடத்துக்கு எடுத்து சென்றனர். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான கட்டிடத்தில் நீதிமன்றம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முதலியன செயல்பட்டு வந்தன. இதைதொடர்ந்து புதிய கட்டிடங்கள் கட்டப்பட்ட பின் நீதிமன்றம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.

பழமையான கட்டிடத்தில் கனிம வளத்துறை, ரயில்வேக்கு நிலம் கையப்படுத்தும் அலுவலகமும் அதன்மாடியில் மகளிர் திட்ட அலுவலகமும், இ-சேவை மையம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் ஆகியன செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது பழமையான கட்டிடத்தில் மகளிர் திட்ட அலுவலகத்தின் மேற்கூறை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக கட்டிடத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மகளிர் திட்ட அலுவலகம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பூமாலை வணிகவளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து மகளிர் திட்ட பணியாளர்கள் அலுவலக தளவாட பொருட்களான மேஜை, பீரோ, சேர்கள் உள்ளிட்ட பொருட்களை லாரிகளில் எடுத்து சென்றனர்.

Related Stories: