கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீர் தாழ்வு

கன்னியாகுமரி, செப்.28: கன்னியாகுமரியில் திடீரென கடல்நீர்மட்டம் தாழ்ந்ததால் படகு சேவை பாதிக்கப்பட்டது. சர்வதேச  சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம்  வருகின்றனர். கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும்  திருவள்ளுவர் சிலையை பார்க்க வசதியாக தமிழக அரசின் பூம்புகார் கப்பல்  போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த  வகையில் தினந்தோறும் காலை 8 மணிக்கு டிக்கெட் வழங்கப்பட்டு 8.30 மணி முதல்  போக்குவரத்து தொடங்குகிறது. ஆனால் அவ்வப்போது இயற்கை மாற்றங்களால் கடல் நீர்மட்டம் திடீரென்று தாழ்வடையும். அப்போது படகு போக்குவரத்து பாதிக்கப்படும். அந்த வகையில் நேற்று அதிகாலை திடீரென்று கடல் நீர்மட்டம் குறைந்தது. இதனால்  படகுகள் தரை தட்டி நின்றன.கடல் நீர்மட்டம் மீண்டும் இயல்புநிலைக்கு  திரும்பிய பின்னர் 9.30 மணிக்கு படகுகள் இயக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டது. இதனால் டிக்கெட் வாங்குவதற்காக வந்த சுற்றுலா பயணிகள்  காலை முதல் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.காலையிலேயே  வெயில் சுட்டெரித்ததால் தலையில் கைக்குட்டை, துப்பட்டா மற்றும் துண்டு  போட்டபடி நின்றதை பார்க்க முடிந்தது. கடல் நீர்மட்டம் இயல்புநிலைக்கு  திரும்பிய பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக 9.30 மணியளவில் மீண்டும் படகு  போக்குவரத்து தொடங்கியது.

Related Stories: