செம்பனார்கோயில் பகுதியில் சம்பா சாகுபடி பணி தீவிரம்

செம்பனார்கோயில், செப்.27: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு விவசாயிகள், குறுவை அறுவடை செய்யப்பட்ட தங்களது வயலை தயார்படுத்தி சம்பா நடவு செய்ய அயராது பாடுபட்டு வருகின்றனர். இது குறித்து பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூறுகையில், குறுவை அறுவடையின்போது தேங்கும் வைக்கோல்களை கட்டுகளாக கட்டிய பின்னரும் வயலில் அதிக அளவில் வைக்கோல்கள் தேங்கி இருக்கும். இதனால் சம்பா நடவுக்கு வயலை தயார்படுத்த டிராக்டரை கொண்டு உழும்போது சிக்கிக் கொள்ளும். இதன் காரணமாக சரியாக வயலை பண்படுத்த முடியாததால் வயலில் தேங்கி கிடக்கும் வைக்கோல்களை தீயிட்டு எரிப்போம். அதன் பின்னர்தான் டிராக்டரை கொண்டு உழும்போது வயல் நடவுக்கு நன்கு பக்குவமாகும்.

செம்பனார்கோயில் வட்டாரத்தில் பெரும்பாலான இடங்களில் சம்பா நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலமாக இருப்பதால் தற்போது நடவு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம். இயற்கை இடர்பாடுகள் இன்றி நடப்பு சம்பா பருவத்தில் நன்றாக விளைச்சல் தர வேண்டும் என்று இறைவனை வேண்டி கொண்டு பணியை தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: