பழநியில் பொதுமக்களிடம் நுகர்வோர் அமைப்பினர் நோட்டீஸ் விநியோகம்

பழநி, செப். 27: தராசில் அரசு முத்திரை உள்ளதா என்பதை கவனித்து பொருட்கள் வாங்க வேண்டுமென பழநியில் பொதுமக்களிடம் நுகர்வோர் அமைப்பினர் பிட்நோட்டீஸ் விநியோகம் செய்தனர். பழநி பஸ் நிலையத்தில் நுகர்வோர் அமைப்பினர் பொருட்கள் வாங்கும்போது கண்காணிக்க வேண்டியவை தொடர்பான கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகித்தனர். பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. நோட்டீசில் கடையில் உள்ள தராசு அரசால் முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மின்னணு தராசு என்றால் எடை காட்டும் இன்டிகேட்டர் 0வில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

மேலும் மேஜை தராசு, விட்டத்தராசு என்றால் 2 தட்டுகளும் சமமாக உள்ளதா என்பதையும், தராசுகளுக்கு கீழே ரப்பர் பேண்ட் அல்லது கயிறு வைத்துக் கட்டப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். இரும்பு எடைகற்களின் அடிப்பாகம் தேய்க்கப்பட்டு உயரம் குறைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். துணிக்கடைகளில் பயன்படுத்தும் மீட்டர் ஸ்கேலின் இருப்பக்க முனைகளிலும் அம்புக்குறிகள் முழுமையாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பேக் செய்யப்பட்ட பொருட்கள் வாங்கும்போது தயாரித்தவர், பேக்கிங் செய்தவர், இறக்குமதியாளர் பெயர்மற்றும் முழு முகவரி உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories: