ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

மதுரை, செப். 27: தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்படுகிறது. இதில் மிஷின் வட்சாலாயா திட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள், தந்தையினை இழந்த குழந்தைகள், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், மிகவும் பின்தங்கிய குடும்ப பொருளாதார சூழ்நிலையில் உள்ள குழந்தைகளின் கல்வி, மருத்துவம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவித்தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள அறிக்கையில், ‘மாவட்டத்தில் இந்த உதவித்தொகை பெறவிரும்புவோர், பெற்றோர்களின் வருமானம் நகர்புறத்தில் ரூ.96 ஆயிரமாகவும், கிராமபுறத்தில் ரூ.72 ஆயிரமாகவும் இருக்க வேண்டும்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் பள்ளி செல்லும் குழந்தைகளாகவும், குழந்தைகள் இல்லம், விடுதிகளில் தங்காமல் பெற்றோர் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளாகவும் இருக்க வேண்டும். உதவித்தொகை அதிகபட்சமாக 3 ஆண்டுகள் அல்லது 18 வயது முடியும் வரை வழங்கப்படும். உதவித்தொகையினை பெற உரிய ஆவணங்களை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கி வரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: