அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிபிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியினர்: திருப்போரூரில் பரபரப்பு

திருப்போரூர், செப். 23: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இருளர் இன மக்கள், திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய குண்ணப்பட்டு ஊராட்சியில் பஞ்சந்தீர்த்தி கிராமம் உள்ளது. இங்குள்ள ஜீவா நகர், ஜெகதீசன் நகர் பகுதிகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். புதியதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு என்பதால் இந்த குடியிருப்புக்கு சாலை வசதி, தெருக்குழாய் வசதி, மின் விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியினர் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு கூட்டமாக அமர்ந்த அவர்கள் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை தரையில் கொட்டி தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், அவ்வாறு செய்து தர இயலாது என்று அறிவித்தால் இவற்றை ஒப்படைப்பதாகவும் கூறி கோஷமிட்டனர்.  இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஓரிரு வாரங்களில் தெரு மின் விளக்கு, குடிநீர் வசதி செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: