என்ஐஏ அதிகாரிகள் சோதனையை கண்டித்து கோபியில் போராட்டம்

கோபி, செப்.23: என்ஐஏ அதிகாரிகள் சோதனையை கண்டித்து கோபி பேருந்து நிலைய சிக்னல் பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தினரை குண்டு கட்டாக போலீசார் தூக்கி சென்றனர். கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மஞ்சேரியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர், மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதேபோல தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு வடக்கு மாவட்ட எஸ்டிபிஐ சார்பில் கோபி பேருந்து நிலைய சிக்னல் பகுதியில் பாப்புலர் பிரெண்ட் ஆப் இந்தியா பொறுப்பாளர் சையது முஸ்தபா தலைமையில், எஸ்டிபிஐ ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கலீல் ரகுமான், தொகுதி தலைவர் தஸ்தகீர் அலி, செயலாளர் சகாபுதீன் மற்றும் நிர்வாகிகள் 15 பேர் சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த கோபி டிஎஸ்பி சியாமளா தேவி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 15க்கும் மேற்பட்டோரை கைது செய்ய முயன்றனர்.

அப்போது காவல்துறையினருக்கும் போராட்டத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ஒருவரையொருவர் கைகோர்த்துக்கொண்டு  எதிர்ப்பை வலிமையை காட்டியதால், காவல்துறையினரால் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தினரை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றிச்சென்றனர். இதையடுத்து, போராட்டம் காரணமாக கோபி சத்தி சாலை, கோபி திருப்பூர் சாலை, கோபி ஈரோடு சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Related Stories: