ஈரோட்டில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா: தாம்பூல தட்டில் சீர்வரிசைகளை மேயர் வழங்கினார்

ஈரோடு, செப். 23:  ஈரோட்டில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் மேயர் நாகரத்தினம் பங்கேற்று சீர்வரிசை பொருட்களை தாம்பூல தட்டுகளில் பரிசாக வழங்கினார்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட நாடார்மேடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட திட்ட அலுவலர் பூங்கோதை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் நாகரத்தினம் பங்கேற்று, 100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்து, மஞ்சள், குங்குமம், வளையல், சேலை, பேரீட்சை மற்றும் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீர்வரிசைகளாக தாம்பூல தட்டில் வழங்கினார்.

தொடர்ந்து, 5 வகையான உணவு வகைகள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், துணை மேயர் செல்வராஜ், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி, வட்டார திட்ட உதவியாளர் வேலாயுதா, தி.மு.க. இலக்கிய அணியின் மாநகர துணை அமைப்பாளர் வீரமணி, கவுன்சிலர்கள் செந்தில்குமார், ராமலிங்கம், தண்டபாணி, வார்டு செயலாளர்கள் பழனிசாமி, மலர் குணா உட்பட பலர் கலந்து கொண்டனர். மண்டபத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், கீரை வகைகள், தானிய வகைகள் கண்காட்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: