திருச்சியில் முதன்முறையாக புத்தகத் திருவிழா 6 நாளில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை மாணவ, மாணவிகள்,பொதுமக்கள் 50 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

திருச்சி செப்.23: திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்முறையாக நடத்தப்படும் புத்தக கண்காட்சியை இதுவரை 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டுள்ளனர். திருச்சியில் கடந்த 16 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழா 5 ஏக்கர் பரப்பளவில் 160 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 150 க்கும் மேற்பட்ட பதிப்பாளர்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதில் 55 மொழிகளில் இயல், இசை, நாடகம், காமிக்ஸ், வரலாறு, கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், புராணங்கள், பெரியார் எழுதிய புத்தகங்கள், டாக்டா் கலைஞர் எழுதிய நூல்கள், தமிழக முதல்வர் எழுதிய நூல் என்று லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்று விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கடந்த 16 ம் தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழாவில் தினசரி மாணவ, மாணவிகள் 3 ஆயிரம் பேரும், பொதுமக்கள் 5 ஆயிரம் பேர் என இதுவரை மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த புத்தகத் திருவிழா கண்டு களித்துள்ளனர். இந்த புத்தகத் திருவிழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகள், பிரபலங்களின் கருத்துரை நிகழ்வுகள், நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோளாரங்கம் மற்றும் வானில் உள்ள கோள்களை கண்டு ரசிக்க தொலைநோக்கி கருவி இந்த திருவிழாவில் மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அரங்குகள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை பஸ்கள் மூலம் அழைத்து வரச் செய்து புத்தக கண்காட்சிகளை காண மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கடந்த 6 நாட்களாக நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் இதுவரை ரூ.2 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இன்னும் 4 நாட்கள் நடைபெறும் புத்தக திருவிழாவில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: