திருச்சியில் வாலிபரை கொன்ற திருநங்கை கைது

திருச்சி, செப்.22: திருச்சியில் வாலிபரை கொன்ற திருநங்கை பெங்களூரில் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சீதாலட்சுமி நகரை சேர்ந்தவர் குமாரசாமி, ஓய்வு பெற்ற விஏஓ. இவரது மகன் பாஸ்கர்(29), பட்டதாரி. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 6ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை மன்னார்புரம் அருகே உள்ள ராணுவ மைதானத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெங்களூரில் பதுங்கி இருந்த திருநங்கையை பிடித்து திருச்சிக்கு தனிப்படை போலீசார் அழைத்து வந்து ‘தங்களது பாணியில்’ விசாரித்தனர். விசாரணையில் திருநங்கை, திருச்சி காஜாநகர் பகுதியை சேர்ந்த சாமிநாதன் (எ) வைஷ்ணவி என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று உல்லாசமாக இருக்க பாஸ்கர், வைஷ்ணவியை அழைத்து சென்றாராம். அங்கு சென்ற பிறகு தான் அவர் திருநங்கை என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதில், ஆத்திரமடைந்த திருநங்கை பாஸ்கரை கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதில் பின்புறமாக கீழே விழுந்ததில், அப்பகுதியில் கிடந்த கல்லில் அடிபட்டுள்ளது. இதில், பாஸ்கருக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணைக்கு பிறகு திருநங்கை வைஷ்ணவியை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: