திருச்சி தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் உறவினர் கோவை ராவணன் திடீர் மரணம்

திருச்சி, செப்.22: திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் உறவினரான கோவை ராவணன் நேற்று திடீர் இறந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ராதாநரசிம்மபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவை ராவணன் (65). இவரது மனைவி தாரனேஸ்வரி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களது ஒரே மகன் அரவிந்த் (30). கொங்கு மண்டல அதிமுக முக்கிய நிர்வாகியாக இருந்து வந்த ராவணன், ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஆலோசகராக இருந்து வந்தாராம். சசிகலாவின் சித்தப்பா கோட்டூர் டாக்டர் கருணாகரனின் மருமகனும் ஆவார். கோவையில் தொழில் நிறுவனம் நடத்தி வந்த ராவணன், அதிமுகவில் சசிகலா முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலைக்கு வந்தபோது அவருக்கு ஆலோசனைகளை சொல்லி வந்தாராம்.

பெங்களூரு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது யாரை முதல்வர் ஆக்குவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது ராவணனை ஆக்கலாம் என்று சசிகலா குடும்பம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. சசிகலா குடும்பத்தினர் மீது, பல்வேறு புகார்கள் வந்து பலரும் போலீசில் சிக்கிய போது அதில் ராவணனும் கைதானது குறிப்பிடத்தக்கது. அரவிந்த், திருச்சியில் மருத்துவ உயர்கல்வி பயின்று வருகிறார். அவருடன் தங்கி இருந்த ராவணனுக்கு திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அவரது சொந்த ஊரான ராதாநரசிம்மபுரத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்த இன்று காலை சசிகலா வர உள்ளார்.

Related Stories: