குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல்

சேலம், செப்.22: சேலம் சூரமங்கலத்தில் மளிகை கடையில் பதுக்கி விற்ற 30 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடை உரிமையாளரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. குட்கா விற்ற 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சேலம் மாநகர பகுதியில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைதாகும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 80க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் நரசோதிபட்டி ஜீவா நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சூரமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனடியாக இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று அங்கு சென்று கடையில் சோதனை செய்தார். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்த 30 கிலோ ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர் பாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் சூரமங்கலத்திற்கு உட்பட்ட சேலத்தாம்பட்டி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களில் தடை செய்யப் பட்ட குட்கா விற்றதாக 5 கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து நேற்று அந்த 5 கடைகளுக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற 90க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது. அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

Related Stories: