பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் வரவேற்பு; வனவிலங்கு-மனித மோதல் தடுக்க நடவடிக்கை: புலிகள் காப்பக துணை இயக்குனர் பேட்டி

சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் கிருபாசங்கர் கூறியதாவது: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் அடிபட்டு விலங்குகள் உயிரிழப்பதை தவிர்க்கவும், வனத்தை விட்டு வெளியேறும் விலங்குகள் நடமாட்டத்தை வாகன ஓட்டிகள் எளிதாக அறிந்து சுதாரிக்கவும் சாலை இருபுறமும் புதர்களை 12 கிமீ தூரத்திற்கு முழுமையாக அகற்றி முழுவீச்சில் தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இரவு நேர வாகன போக்குவரத்து தடை அமலில் உள்ளது.

கனரக சரக்கு வாகனங்கள் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரையும், இலகு ரக சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வனப்பகுதி சாலையில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் இரவு நேரத்தில் வனத்துறை ஊழியர்கள் வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி பண்ணாரி அம்மன் கோயில் பகுதியில் நடமாடிய காட்டு யானை அப்பகுதியில் இருந்த லாரி ஓட்டுனரை மிதித்து கொன்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணாரி சோதனைச்சாவடி பகுதி மற்றும் கோயில் பகுதியில் சாலையில் இரவு 9 மணிக்கு மேல் சரக்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு மாற்றாக, சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா நோக்கி செல்லும் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணிக்கு மேல் புது வடவள்ளி பகுதியில் நிறுத்துமாறும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான வனவிலங்கு-மனித மோதலை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, புலிகள் காப்பக துணை இயக்குனர் கிருபாசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: