பள்ளிகளில் காலாண்டு தேர்வு நாளை தொடக்கம் மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிப்பு

நாகர்கோவில், செப்.22: தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு , காலாண்டு தேர்வுகள் நாளை (23ம் தேதி) தொடங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் முறையாக நடைபெறவில்லை. ஆன்லைனில் வகுப்பு மற்றும் தேர்வு என்ற அடிப்படையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் கொரோனா பரவலில் இருந்து மக்கள் விடுபட்டுள்ள நிலையில் முறையான வகுப்புகள் செயல்பட தொடங்கியுள்ளன.

இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுகள் செப்டம்பர் 23ம் தேதி (நாளை) ெதாடங்க உள்ளது. முதல்கட்டமாக பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக 1 முதல் 5ம் வகுப்புவரை அரசு பள்ளி மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டு முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

இதில் 6, 8, 10ம் வகுப்புகளுக்கு காலையிலும் 7, 9ம் வகுப்புகளுக்கு பிற்பகலும் தேர்வுகள் நடத்தும் வகையில் கால அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான வினாத்தாள் என்று இல்லாமல் மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு இந்த முறை மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த வினாத்தாள்கள் அதற்கான தொகுப்பு மையங்களில் வைக்கப்பட்டு அங்கிருந்து ஒவ்வொரு தேர்வு நாளன்றும் காலையில் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படும். 30ம் தேதிக்குள் தேர்வுகள் முடிக்கப்படும் நிலையில் தொடர்ந்து மாணவர்களுக்கு 5 நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகாமல் பாதுகாப்புடன் தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: