நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் களைகட்டியது கொலு பொம்மைகள் விற்பனை

காஞ்சிபுரம், செப். 22: நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில்  களைக்கட்டிய கொலு பொம்மைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழா, வரும், 26ம் தேதி தொடங்குகிறது. மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10 வது நாளில் அவனை வதம் செய்து வெற்றி கொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும் தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த, விழாவையொட்டி கோயில்களிலும், வீடுகளிலும், கொலு வைக்கப்படும். இதற்காக, சின்ன காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில், சுமார் 15 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பல தலைமுறைகளாக, கொலு பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு நவராத்திரி விழாவுக்கு பல்வேறு வகையான பொம்மைகள் தயார் செய்யப்படுகின்றன. பல்வேறு கடவுள் பொம்மைகள், சுவாமிகளின் கல்யாணக் கோலங்கள், கிருஷ்ண லீலா, ராவண தர்பார், விவசாயப் பணிகள், கடோத்கஜன், தேர், காய்கறிகள், பழங்கள், தசாவதாரம், கிரிக்கெட் செட், கும்பகர்ணன், மீனாட்சி திருக்கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீர் செட், ஊஞ்சல் செட், இந்திர விமானம், கிராமிய செட், தசாவதாரம், அன்னபூரணி, கிருஷ்ணன், ராதை, வளைகாப்பு செட் என பல வகையான பொம்மைகள் தயாரித்துள்ளனர். இங்கு தயாராகும் பொம்மைகள் காஞ்சிபுரம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து நவராத்திரி கொலு பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு குறைந்தபட்சம் ₹200 முதல் அதிகபட்சமாக ₹5 ஆயிரம் வரை விலையுள்ள பொம்மைகள் கிடைக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு ஓரளவு விற்பனை சூடு பிடித்திருப்பதாக பொம்மை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். சீசனுக்கு ஏற்றாற்போல் மாடல்களில் களிமண் மற்றும் காகிதக் கூழ் கொண்டு பொம்மைகள் செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாட்டால் கொலு பொம்மை விற்பனை பாதித்தது, இந்த ஆண்டு நிலைமை ஓரளவு மாறியுள்ளது. நவராத்திரி விழாவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் விற்பனை சூடு பிடித்திருப்பதாக பொம்மை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: