எஸ்ஐ உட்பட 3 பேர் காயம் புதுவையில் பெரியார் திகவினர் இந்து முன்னணியினர் மோதல் புதுவையில் பெரியார் திகவினர் இந்து முன்னணியினர் மோதல் போலீஸ் தடியடி- கல்வீச்சு

புதுச்சேரி,  செப். 21:  புதுச்சேரியில் மனுதர்மம் எதிர்ப்பு  போராட்டத்தின்போது தந்தை பெரியார் திகவினருக்கும், இந்து  முன்னணியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த  கல்வீச்சு, தடியடி சம்பவத்தில் எஸ்ஐ உள்பட 3 பேர் காயமடைந்தனர்.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  புதுச்சேரியில் தந்தை  பெரியார் திராவிடர் கழகத்தினர்  மனுதர்ம நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை  புதுச்சேரி, காமராஜர் சாலை, ராஜா தியேட்டர் சந்திப்பு அருகே மனுதர்ம சாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட தந்தை பெரியார்  திகவினர் ஊர்வலமாக வந்தனர். ஒன்றிய அரசின் வெப்சைட்டில் உள்ள மனுதர்ம  சாஸ்திரத்தை நீக்க வேண்டும். அவற்றை உடனே தடைசெய்ய வேண்டுமென கோஷமிட்டபடி  சாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் சுரேஷ்,  பொருளாளர் பெருமாள், இளைஞரணி சிவமுருகன், தொழிற்சங்கத் தலைவர் ஜெகன்,  மகளிரணி சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில் திராவிடர் விடுதலைக்கழக  தலைவர் லோகு.அய்யப்பன், நகர தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ்  உள்ளிட்டோரும் பங்கேற்று ஆதரவு தெரிவித்து முழக்கமிட்டனர். அப்போது தந்தை பெரியார் திகவினர் மனுதர்மத்தை எரிக்க முயன்றனர்.   காமராஜர் சாலை- அண்ணா சாலை சந்திப்பில்  நிர்வாகிகள் சனில்குமார், முருகையன் ஆகியோர் தலைமையில் இந்து முன்னணியினர்  மற்றும் பாஜக நிர்வாகிகள் பேரணியாக திரண்டுவந்து எதிர்போராட்டத்தில்  ஈடுபட்டனர். தந்தை பெரியார் திகவினர் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தது  யார்? என கேட்டு தந்தை பெரியார் திகவினர் மற்றும் போலீசுக்கு எதிராக  முழக்கமிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அதுசமயம்  மனுதர்ம சாஸ்திரத்தை தந்தை பெரியார் திகவினர் கொளுத்த முயன்றனர். அப்போது இந்து முன்னணி அமைப்பினர் கருங்கற்களை, செருப்புகளை வீசியெறிந்து தடுக்க  முயன்றனர். மேலும் அங்கிருந்த காவல்துறை வாகனத்தின் மீது தாக்குதல்  நடத்தினர். இதில் போலீஸ் வாகனத்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தந்தை  பெரியார் திகவினர் இந்து முன்னணியினர் மீது  வீசிய கற்களை,  செருப்புகளை எடுத்து மீண்டும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் பக்கெட்டில்  இருந்த தண்ணீரை வீசிறியெறிந்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதி  போர்க்களமாக மாறி பதற்றமான சூழல் ஏற்பட்டது. அங்கு  பாதுகாப்பு பணியிலிருந்த கிழக்கு எஸ்பி வம்சித ரெட்டி, இன்ஸ்பெக்டர்கள்  கண்ணன்(பெரியகடை), நாகராஜ் (முத்தியால்பேட்டை), கார்த்திகேயன் (ஒதியஞ்சாலை)  மற்றும் எஸ்ஐக்கள் குமார், சிவசங்கரன் தலைமையிலான போலீசார் இருதரப்பினர்  மீதும் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.

இருதரப்பினரும்  ஒருவரையொருவர் மாறி,மாறி கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். தந்தை  பெரியார் திகவினர் 30க்கும் மேற்பட்டோரை தடுத்த போலீசார் அவர்களை  வலுக்கட்டாயமாக கைது செய்து கரிக்குடோனுக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு இந்து முன்னணியினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மோதலில் எஸ்ஐ  குமார், இந்துமுன்னணி நிர்வாகி முருகையன் மற்றும் தொண்டர் உள்பட 3 பேர்  காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில்  இந்து முன்னணி நிர்வாகியை சபாநாயகர் செல்வம் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இந்து முன்னணியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Related Stories: