பெரியகுப்பம் மீன் மார்க்கெட்டில் இறைச்சிக்காக மாடுகளை பொது இடத்தில் வெட்டும் அவலம்: மக்கள் அதிர்ச்சி

திருவள்ளூர்: இறைச்சிக்காக பொதுஇடத்தில் மாடுகள் வெட்டுவதை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெரியகுப்பம் மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டில் அனைத்து வகையான மீன்கள், இறால், நண்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட மீன் கடைகளுக்கு அருகில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி கடைகள் உள்ளன. அசைவப்பிரியர்கள் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளலாம். இதேபோல் மாட்டு இறைச்சிக்கும் தனியாக கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.  கோழிகளை வெட்டி, சுத்தம் செய்து வாடிக்கையாளர்கள் கேட்கும்போது அந்த கோழிக்கறியை கேட்கும் அளவுக்கு ஏற்ப வெட்டி கொடுப்பதுண்டு. அதேபோல் ஆட்டு இறைச்சிக்கு ஆட்டு தொட்டியில் வெட்டி அதை கொண்டு வந்து பொது மக்களுக்கு விற்பனை செய்வது உண்டு.

ஆனால் பெரியகுப்பம் மீன் மார்க்கெட்டில் உள்ள மாட்டு இறைச்சி கடையில் நாங்கள் தரமான மாடுகளை தான் வெட்டி விற்பனை செய்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாக கடைக்கு அருகிலேயே மாடுகளை கட்டி வைத்திருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன தான் அசைவ பிரியர்களாக இருந்தாலும் என்ன மாதிரியான இறைச்சியை உண்கிறோம் என்பதில் ஆர்வம் காட்டினாலும், இதுபோன்று மாடுகளை கடைக்கு அருகில் கட்டி வைத்திருப்பது மற்ற அசைவ பிரியர்களிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மாடுகளை வெட்டுவதற்காக தனியாக ஒரு பகுதியை அமைத்து அங்கு வெட்டி விற்பனைக்காக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: