திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

திருத்தணி, ஏப். 23: திருத்தணி அருகே திரவுபதி அம்மன் திருக்கோயிலில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். திருத்தணி அருகே புச்சிரெட்டிபள்ளியில் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி திருக்கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் பகல் நேரங்களில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவில் தெருக்கூத்து நடைபெற்று வந்தது. விழாவில் பெண்கள் குத்து விளக்கு பூஜை, அம்மன் கிராம வீதியுலா, தபசு, துரியோதனன் படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை தீமிதி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடைகள் உடுத்தி வேப்பிலையுடன் கிராம வீதிகளில் ஊர்வலமாக வந்து மாலை 7 மணி அளவில் கோயில் அக்னி குண்டம் முன்பு வந்தடைந்தனர். சிறப்பு மலர் அலங்காரத்தில் அக்னி குண்டம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் திரவுபதி அம்மன் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயிலில் குவிந்து கோவிந்தா, கோவிந்தா முழக்கங்களுடன் பூங்கரகம் முதலில் அக்னி குண்டத்தில் இறங்கியதை தொடர்ந்து காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் பயபக்தியுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இதனை அடுத்து வாண வேடிக்கை நடைபெற்று அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவில் திருத்தணி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி குமார், ஒன்றிய கவுன்சிலர் நீலா கோவிந்தசாமி உட்பட கிராம மக்கள் பெருந்திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தீமிதி திருவிழாவில் நேற்று காலை தருமராஜா பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெற்றது.

The post திருத்தணி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: