கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆலம்பரை கோட்டையை சுற்றுலா தலமாக மாற்றவேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

செய்யூர், செப். 20:  கிழக்கு ஆலம்பரை கோட்டையை காண தினந்தோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ஆனால், அங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் கிழக்கு கடற்கரை சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக் கடலும், பக்கிங்காம் கால்வாயும் இணையும் முகத்துவாரத்தில் ஆலம்பரை கோட்டை அமைந்துள்ளது. சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில் இப்பகுதி இடைக்கழிநாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருபுறம் கடலாலும், மூன்று புறம் கழிமுகத்தாலும் சூழப்பட்டுள்ளதால் இடைக்கழிநாடு என அழைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஆலம்பரை கோட்டை கி.பி 17ம் நூற்றாண்டின் இறுதியில் முகலாய அரசர்களால் கட்டப்பட்டது. செங்கல் மற்றும் சுண்ணாப்பு கலவையை பயன்படுத்தி கட்டியுள்ளனர். சதுர வடிவிலான கண்காணிப்பு மாடங்களுடன் 15 ஏக்கர் பரப்பளவில் கோட்டை கட்டப்பட்டுள்ளது. கிபி 1735ம் ஆண்டு நவாப் தோஸ்த் அலிகான் இப்பகுதியை ஆண்டபோது இந்த கோட்டை சிறந்த துறைமுகப் பட்டினமாக திகழ்ந்துள்ளது. கிபி 1750ம் ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய பிரெஞ்சு தளபதி டியூப்ளசுக்கு இப்பகுதியை ஆண்ட சுபேதார் முசார் பர்ஜங் கோட்டையை பரிசாக அளித்துள்ளார்.

பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தபோது கி.பி. 1760ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கைப்பற்றினர்.

அப்போது நடந்த போரின்போது கோட்டையின் பெரும்பாலானப் பகுதிகள் சிதைக்கப்பட்டன. கோட்டை சுவர்கள் படையெடுப்பாலும், கடல் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும் உருக்குலைந்து காணப்படுகிறது. தற்போது கோட்டையின் உடைந்த சுவர்கள் மட்டும் வரலாற்றை நினைவு கூறியபடி நிற்கிறது. கோட்டை நுழைவு வாயில் அருகே இரு புறங்களிலும் படிக்கட்டுகள் காணப்படுகின்றன. கோட்டை கீழ்பகுதியில் 100 மீட்டர் நீளத்திற்கு படகுத்துறை உள்ளது. இது கப்பலில் பொருட்களை ஏற்றி இறக்க பயன்பட்டுள்ளது. ஆலம்பரை படகுத் துறையிலிருந்து சரிகை துணி வகைகள், உப்பு, நெய் போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. கோட்டையில் அமைந்திருந்த நாணயச் சாலையில் ஆலம்பரைக் காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்நாணயச்சாலையின் பொறுப்பாளராக பொட்டி பத்தன் என்பவர் இருந்தார்.

இவர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக காசி, ராமேஸ்வரத்திற்கு தீர்த்த யாத்திரை செல்லும் யாத்ரிகர்களுக்காக சிவன் கோயில், குளம், யாத்ரிகர்கள் தங்க சத்திரம் ஆகியவற்றை கோட்டையிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கட்டியுள்ளார். சிதிலமடைந்த கோயிலை கிராம மக்கள் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து தினசரி பூஜைகள் செய்து வருகின்றனர். குளமும் சீரமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. ஆனால், சத்திரம் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோட்டை சிறந்த சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. செய்யூர், இடைக்கழிநாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திருவிழாக்காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் மக்கள் டிராக்டர், ஆட்டோ, லாரிகள் மூலம் கோட்டை அமைந்துள்ள பகுதிக்கு செல்வர். அங்கு கடற்கரையில் குளித்துவிட்டு சவுக்கு தோப்பு பகுதியில் சமையல் செய்து சாப்பிடுவார்கள்.

பின்னர், கோட்டையை சுற்றிப் பார்த்துவிட்டு செல்வர். ஆனால், கோட்டைக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லை. பஸ்கள் கடப்பாக்கம் பஸ் நிலையம் வரை வந்து செல்கின்றன. சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து கோட்டைக்கு செல்கின்றனர். சிலர் ஆட்டோக்களில் செல்கின்றனர். கோட்டையை சுற்றியுள்ள ஆலம்பரை, தண்டுமாரியம்மன், கடப்பாக்கம் குப்பங்களைச் சேர்ந்த மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் கடல் மீன்களை கொண்டு செல்ல போக்குவரத்து வசதியில்லை. தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளது. கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை உபாதைக்கு ஒதுங்க கழிப்பிட வசதியில்லை. இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன.

மத்திய தொல்பொருள் துறை கட்டுப்பாட்டிலிருந்தும் கோட்டையை பாதுகாக்கவும், அப்பகுதியை அழகுபடுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலை, நீடித்தால் ஆலம்பரை கோட்டை முற்றிலும் காணாமல் போகும் அபாயம் உள்ளது. எனவே வரலாற்று நினைவுகளை தாங்கி நிற்கும் ஆலம்பரை கோட்டையை வருங்காலத் தலைமுறையினரும் கண்டுகளிக்கும் வகையில் பாதுகாக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.

புகைப்படம் எடுக்கும் ஜோடிகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படம் முன்னணி நடிகர்கள் தனுஷ், சூர்யா, விக்ரம், ஆகியோர்களின் திருவிளையாடல் ஆரம்பம், பிதாமகன், வெயில் உள்ளிட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. இந்த படப்பிடிப்புகள் நடைபெறும் பொழுது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பணம் வசூல் செய்வதில் தகராறு ஏற்பட்டு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது, இங்கு திருமண ஜோடிகளின் மாடலிங் புகைப்படங்கள் எடுக்க ஏராளமான புகைப்படக்காரர்களும் திருமண ஜோடிகளும் குவிந்து வருகின்றனர்.

குவியும் சுற்றுலா பயணிகள்

இந்த கோட்டை நான்கு புறமும் சுமார் 20 அடி உயரம் கோட்டை சுவர் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கோட்டை சுவரின் மீது ஏறி கோட்டையையும் கடற்கரை அழகையும் கண்டு களித்து செல்கின்றனர். கோட்டை குறித்த வரலாறு பலகை, கல்வெட்டு ஆகியவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 25 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வரை இங்கு வந்து செல்கின்றனர்.

சென்னையில் இருந்து 105கிமீ

கிழக்கு கடற்கரை சாலையில், சென்னையில் இருந்து 105 கிமீ., தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 40 கிமீ தொலைவிலும் உள்ளது கடப்பாக்கம்.  இங்கிருந்து கிழக்கு நோக்கி செல்லும்போது கடற்கரை சாலையில் 3 கிமீ. தொலைவில் ஆலம்பரை கோட்டை அதனை ஒட்டியுள்ள ஆறு, கடல் அமைந்துள்ளது.

படகு குழாம் வேண்டும்

பல்வேறு பகுதிகளில் இருந்து 100 நூற்றுக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் ஆலம்பரை கோட்டைக்கு வருகின்றனர். அவர்கள், அங்கு மீனவர்களின் படகில் சவாரி செய்கின்றனர். அப்போது, அவர்கள் லைப் ஜாக்கெட் இன்றி பாதுகாப்பற்ற முறையில் செல்கின்றனர். மேலும், மீனவர்கள் அதிக பணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆலம்பரை கோட்டையில் அரசு படகு குழாம் அமைத்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் படகு சவாரி செய்ய ஏற்பாடு செய்யவேண்டும்.

Related Stories: