ஓணம் பண்டிகை - சுப முகூர்த்தம் ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

ஈரோடு, செப். 7: ஈரோடு காய்கறி மார்கெட்டுக்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், பழனி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மா நிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளது. மேலும், தொடர்ந்து சுப முகூர்த்த நாள்கள், கோயில் விசேஷங்கள் காரணமாக காய்கறிகளின் தேவை மேலும் அதிகரித்ததுள்ளது. இதன் காரணமாக ஈரோடு காய்கறி மார்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. நாளை ஓணம் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், கேரள மாநிலத்துக்கு காய்கறிகள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுவதால் ஈரோடு மார்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் வரத்து மேலும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவற்றின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ. 40 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் கிலோ ரூ.60க்கு விற்பனையான கத்திரிக்காய் நேற்று ரூ.80க்கு விற்பனையானது.

இதேபோல, வெண்டைக்காய் விலையும் கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனையானது. கடந்த வாரம் கிலோ ரூ.40க்கு விற்பனையான முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்து நேற்று ரூ.150க்கு விற்பனையானது. இதேபோல, கடந்த 10 நாள்களுக்கு முன் கிலோ ரூ.10க்கு விற்பனையான தக்காளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து நேற்று கிலோ ரூ.60க்கு விற்பனையானது. நேற்று ஈரோடு மார்கெட்டில் விற்பனையான மற்ற காய்கறிகளின் விலை விவரம் (கிலோவில்)  வருமாறு: புடலங்காய்  ரூ.40 - 50, பீர்க்கங்காய் ரூ.60, பாகற்காய் ரூ.50, முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.90, பீட்ரூட் ரூ.60, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.100 - 110, மிளகாய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.25, காலிபிளவர்  ரூ.40 - 60, உருளைக்கிழங்கு ரூ.50, கருப்பு அவரை, பட்டை அவரை ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.30.தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை

Related Stories: