திருப்புத்தூரில் பொக்கிச மாகாளி கோயிலில் பால்குட விழா

திருப்புத்தூர், ஆக.10: திருப்புத்தூரில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் நேற்று பால்குட விழா நடைபெற்றன. திருப்புத்தூர் மேலரத வீதியில் அமைந்துள்ள பொக்கிச மாகாளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி காப்பு கட்டப்பட்டது. இதனையடுத்து தினந்தோறும் மாலை மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இந்நிலையில், நேற்று காலையில் கோட்டை கருப்பர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து காரைக்குடி ரோடு, நான்கு ரோடு, தேரடிவீதி பூமாயி அம்மன் கோயில் பகுதி, அஞ்சலக வீதி உள்ளிட்ட வீதிகளின் வழியாக வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குட பாலால் விநாயகர், காளியம்மன் மற்றும் மகா முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூனிஸ்வரருக்கு வெள்ளி அங்கி அணிவித்தும், காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தும் தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: