கூடலூர் அருகே மழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

கூடலூர், ஆக.4:  சென்னை வானிலை மையம் நேற்று நீலகிரி மாவட்டத்தில் அதித கனமழை என்று அறிவித்திருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பை விட மழை குறைந்தே காணப்பட்டது. அதிக மழை பெய்யாததால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்  கூடலூர் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள உயர்ந்த மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றினர். கூடலூர் தாசில்தார் சித்தராஜ், 4வது வார்டு உறுப்பினர் வெண்ணிலா சேகர் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் மரங்களின் கிளைகள் அங்கிருந்து வெட்டி அகற்றப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ள நிலையில் ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவரது வீட்டின் முன்புற சுவர் இடிந்து விழுந்தது. இப்பகுதியில் வருவாய் துறையினர், பேரூராட்சி தலைவர் சித்ராதேவி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்து சேதம் மதிப்பீடு செய்துள்ளனர்.

Related Stories: