காதலிக்க மறுத்ததால் வீடுபுகுந்து ஆசிரியையை காரில் கடத்திய 4 பேர் கும்பல் கைது

விக்கிரவாண்டி, ஆக. 4: மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி ஆசிரியையை காரில் கடத்திச்சென்ற கும்பலை விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக காதலன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை கஞ்சான் மேட்டுதெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன் (32). மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கொரோனா காலகட்டத்துக்கு பின்பு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார். மயிலாடுதுறை செட்டிகுளத்தில் வசிக்கும் 23 வயதான பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் விக்னேஸ்வரன் பாட்டி வீடான மயிலாடுதுறை பகுதிக்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அப்போது ஆசிரியைக்கும், விக்னேஸ்வரனுக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது, கொரோனா காலகட்டத்தில் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் விக்னேஸ்வரன் ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்து திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் ஆசிரியைக்கு பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அறிந்து கொண்ட விக்னேஸ்வரன் தனது நண்பர்களான விழுப்புரம் மாவட்டம் பில்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (32) மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் (35) ஆகியோரிடம் மது போதையில் இதுபற்றி கூறியுள்ளார். தொடர்ந்து விக்னேஸ்வரன் மற்றும் அவர்களது நண்பர்கள் 15 பேருடன் நேற்று முன்தினம் மாலை காதலியின் வீட்டுக்குள் சென்று அவரை கடத்திக் கொண்டு காரில் தப்பி சென்றுள்ளனர். அந்தப்பெண் கதறி அழுதபோதும் விக்னேஸ்வரன் கும்பல் விடவில்லை.

தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டனர். அப்போது விக்னேஸ்வரன் வந்த கார் நம்பர் பதிவாகியிருந்தது. இதையடுத்து கார் எண்ணை ைவத்து விசாரித்த போது, அந்த கார் கொள்ளிடம் செக்போஸ்ட்டை கடந்து விழுப்புரம் நோக்கி செல்வது தெரியவந்தது. விழுப்புரம் எஸ்பியை தொடர்பு கொண்டு விக்கிரவாண்டி நோக்கி வரும் காரை தடுத்து நிறுத்துமாறு மயிலாடுதுறை எஸ்பி நிஷா கேட்டுக்கொண்டார். அதன்பேரில் விக்கிரவாண்டி செக்போஸ்ட்டில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் பெண்ணை கடத்தி சென்ற காரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். மேலும் காரில் இருந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகளான மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ், விழுப்புரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து மயிலாடுதுறை போலீசார், விக்கிரவாண்டி சென்று 3 பேரையும் அழைத்து வந்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய சுபாஷ் சந்திரபோசின் காரை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த செந்தில் என்பவரை மயிலாடுதுறையில் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ெதாடர்புடைய மேலும் 11 பேரை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: