ஆனைபள்ளம் கிராமத்தில் ரூ. 18.79 லட்சத்தில் பள்ளி கட்டிடம்; சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த ஆனைபள்ளம் கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆனைப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஓடு பொருத்திய இந்த பள்ளி கட்டிடமானது மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா விடுமுறையின்போது பள்ளியின் ஒரு புறத்தில் திடீரென ஓடு திடீரென உடைந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் எந்தவித விபத்தும் நிகழவில்லை. இதனால், இந்த கட்டிடத்தினை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 18.79 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா நடந்தது. விழாவில், உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிக்குமார் தலைமை தாங்கினார்.  ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், நகர செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வார்டு உறுப்பினர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றார்.  

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பள்ளி கட்டிடத்தினை மாணவ, மாணவிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில், பள்ளி தலைமை ஆசிரியை அனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: