கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செயலி மூலம் வருகை பதிவு

கடலூர், ஆக. 2:   கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நேற்று முதல் செயலி மூலம் வருகை பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் கற்றல் பணிகள் சிறப்பாக இருக்க, தலைமை ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு வகுப்பிற்கு சென்று பாடம் கற்பிக்க வேண்டும். கல்வி அலுவலர்கள் மற்றும் கலெக்டர்கள் அனுமதியின்றி பள்ளிக்கு விடுமுறை அளிக்க கூடாது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம். வருகைப்பதிவினை செயலி வாயிலாக பதிவு செய்தால் மட்டும் போதுமானது.

மேலும், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல் அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்க TNSED-School செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள் பள்ளி ஆய்வு பணிகளை முக்கியமாக மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் வருகையை வகுப்பு வாரியாக EMISல் பதிவு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்ட பள்ளிகளில் நேற்று முதல் புதிய நடைமுறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலியை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் வருகையை பதிவு செய்தனர்.

Related Stories: