விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளுக்கும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும்: நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

விருதுநகர், ஜூலை 30: விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். விருதுநகரில் நகர்மன்ற கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2019-20 நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் நகராட்சியில் 87 லைட்டுகள் பொருத்த ரூ.34 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதில், 32 லைட்டுகள் பொருத்த நிலையில் 55 லைட்டுகள் பொருத்தப்படவில்லை என காங்கிரஸ் கவுன்சிலர்கள் செல்வரத்தினா, பால்பாண்டி, ரம்யா, ராஜ்குமார், ரோகினி, மாலதி, பேபி ராணி, சித்தேஸ்வரி, மஞ்சுளா எதிர்ப்பு தெரிவித்தனர்.

நகராட்சியில் 2018ல் 57 பேட்டரி குப்பை வாகனங்கள் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சாத்தூர் ரோடு, சத்தியமூர்த்தி ரோடு, கிருஷ்ணமாச்சாரி ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. நகராட்சி பணியாளர்கள் வாடகை வண்டி எடுத்து குப்பை பெற்றுச் செல்கின்றனர். நகரில் தற்போது எத்தனை பேட்டரி வாகனங்கள் இயக்கத்தில் இருக்கிறது என கவுன்சிலர்கள் ஜெயக்குமார் (சிபிஎம்), முத்துராமன் (திமுக), ராமலட்சுமி (திமுக), பணப்பாண்டி (திமுக) உள்ளிட்ட கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

நகரில் குடிநீர் விநியோகத்தை 3 நாட்களுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் வழங்குவதாக கூறி, தற்போது ஒன்றரை மணி நேரம் மட்டும் குடிநீர் வழங்கப்படுகிறது. யாரை கேட்டு மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், 3 நாட்கள் என கூறப்படும் தண்ணீர் தற்போது 8 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது. பழைய முறைப்படி 3 மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் மதியழகன் (திமுக), சுல்தான் அலவுதின் (திமுக), ராமலட்சுமி (திமுக), ஜெயக்குமார் (சிபிஎம்), உமாராணி (திமுக), சுல்தான் அலவுதின் (திமுக) கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

ரயில்வே லைனுக்கு கிழக்குப்பகுதியில் தாமிரபரணி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேற்கு பகுதியில் ஆனைக்குட்டம் அணைப்பகுதி கிணறுகளில் எடுக்கப்படும் உப்புத்தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 36 வார்டுகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வழங்க வேண்டும். இல்லையென்றால், குடிநீர் கட்டணம் வசூலிக்க கூடாது என திமுக, சிபிஎம், அதிமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். நகராட்சி ஆணையர் தட்சணமூர்த்தி: 36 பேட்டரி வாகனங்கள் இயக்கத்தில் இருக்கிறது. புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வந்ததும், அனைத்து பகுதியிலும் தாமிரபரணி குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தார்.

நகராட்சி பொறியாளர் மணி கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை. பொறியாளர் துறையில் அளிக்கப்படும் மனுக்கள் மாயமாகி விடுகிறது. பொறியாளர் மணி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி நகர்மன்ற தலைவர் மாதவனிடம், கவுன்சிலர்கள் பால்பாண்டி, ஆஷா, முனீஸ்வரி, ராமலட்சுமி, மதியழகன் உள்பட பலர் மனு அளித்தனர்.

Related Stories: