வாடகை கொடுக்க முடியாததால் விரக்தி: சமையல் தொழிலாளி தற்கொலை

குன்றத்தூர்:  குன்றத்தூரில் வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் விரக்தியடைந்த சமையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். குன்றத்தூர் புது வட்டாரம், கன்னியம்மன் தெருவை சேர்ந்தவர் ஆதம் பாஷா (35). இவருக்கு திருமணமாகி அம்ருதீன் என்ற மனைவி, மூன்று மகள்களும் உள்ளனர். அதே பகுதியில் சமையல் வேலை செய்து வந்த ஆதம்பாஷாவிற்கு கடந்த சில தினங்களாக தொழில் சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தான் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். வீட்டின் உரிமையாளர் வாடகை பணத்தை கேட்ட போது, காலம் கடத்தி வந்தார்.

இந்தநிலையில், இதற்கு மேலும், வீட்டு வாடகை பணத்தை கொடுக்காமல் இருக்க முடியாது என்று நினைத்த ஆதம்பாஷா சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தான் குடியிருந்த வாடகை வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த ஆதம்பாஷா உடலை மீட்டு, அதனை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப் பதிவு செய்தனர்.  விசாரணையில், கடந்த ஒரு வருடமாக தான் குடியிருக்கும் வீட்டிற்கு ஆதம்பாஷா வாடகை கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடும் மனஉளச்சலில் இருந்து வந்த ஆதம்பாஷா தனது மனைவி மற்றும் பிள்ளைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: