இலவச வீட்டுமனை விவகாரத்தில் பெண் வட்டாட்சியரை சிறைபிடித்து மக்கள் மறியல்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த ராஜாநகரம் கிராம  பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிராமத்திற்கு அருகில் ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், பல ஆண்டுகளாக பயனாளிகளுக்கு சர்வே செய்து வழங்கப்படாத நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில், இலவச வீட்டு மனைகள் பெற்ற பயனாளிகள்,  மனிதவள ஆணையத்திடம் புகார் செய்திருந்தனர்.  இதனை தொடர்ந்து,  பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைகள் சர்வீஸ் செய்து வழங்க வேண்டும் என மனிதவள ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி கோட்டாட்சியர் சத்யா தலைமையில் வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் இலவச வீட்டு மனைகள் சர்வே செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும், நேற்று காலை திடீரென கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, இலவச வீட்டுமனை சர்வே செய்து அமைக்கப்பட்டிருந்த சர்வே கற்களை அகற்றினர்.

இச்சம்பவம் தொடர்பாக கிராமத்தைச் சேர்ந்த கவிகண்ணன், விநாயகம், ஜெயராமன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால், ஆத்திரமடைந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டு - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், மாநில நெடுஞ்சாலையில் மரங்கள் வெட்டி சாய்த்தனர். பொதுமக்களுடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் தமயந்தியை சிறைபிடித்தனர்.

போராட்டக்காரர்கள் பிடியில் சிக்கி 3 மணிநேரம் போராடிய வட்டாட்சியர் திடீரென மயக்கம் அடைந்தார்‌. அவரை கடும் போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களிடமிருந்து மீட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது திடீரென பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென மின்சாரம் தடை செய்யப்பட்டது. அப்போது, சரமாரியாக கற்களை கொண்டு போலீசார் மீது  வீசி தாக்குதல் நடந்தது. இதனால், பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: