திருச்சி பஞ்சப்பூர் ஜங்ஷனில் புதிதாக திறக்கப்பட்ட காவல் சோதனை சாவடியால் குற்ற சம்பவங்கள் குறைந்தது

திருச்சி, ஜூன் 14: திருச்சி பஞ்சப்பூர் ஜங்ஷனில் புதிதாக திறக்கப்பட்ட காவல் சோதனை சாவடியால் குற்றச்சம்பவங்கள் குறைந்து வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயனித்து வருகின்றனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மாநகரத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கியுள்ளார். முக்கியமாக, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியாக உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், திருச்சி மாநகர எல்லைக்குள் டூவீலர் முதல் கனரக வாகனங்கள் நுழையும் பல்வேறு இடங்களில் காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், மாநகருக்குள் நுழைவதற்கு 9 இடங்களில் காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடிகளில் அத்தியாவசிய நேரங்கள் மற்றும் தேவைப்படும் போது வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக, அனைத்து காவல் சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எடமலைப்பட்டிபுதூர் கோரையாறு கிருஷ்ணாபுரம் அருகே இருந்த காவல் சோதனை சாவடி எண் 2, தற்போது திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூர் ஜங்ஷன் அருகே புதிதாக அமைக்க மாநகர கமிஷனர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்தார். இந்த சோதனை சாவடியில் வாகன எண்களை கண்டறியும் தானியங்கி 2 கேமராக்கள், 4 சிசிடிவி கேமராக்கள் மற்றும் பொது முகவரி அமைப்பு ஒலி பெருக்கி, சூரிய மின்சார விளக்குடன் கூடிய இரும்பு தடுப்பான்கள், தடையில்லா மின்சார வசதி மற்றும் கழிவறையுடன் கூடிய புதிய கட்டிடத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காவல் சோதனை சாவடி எண்2 கடந்த மே 14ம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த சோதனை சாவடியில் எந்நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,‘‘ திருச்சி பஞ்சப்பூர் ஜங்ஷனில் புதிய காவல் சோதனை சாவடி எண் 2 திறக்கப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அச்சமின்றி வாகனங்களில் சென்று வருகின்றனர். முக்கியமாக, இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால், வாகன விபத்துகளும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது,’’என்றனர்.

Related Stories: