மதுராந்தகம் நகரில் முக்கிய சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு: சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி முற்றிலும் கிராமப்புறங்கள் சூழ்ந்த ஒரு நகராகும். கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் விவசாய பொருட்களை விற்கவும், விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும், அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், நகரில் செயல்படும்  மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வந்து செல்லவும், முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தங்களுக்கு செல்லவும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில், மதுராந்தகம் நகரில் உள்ள 5 முக்கிய சாலைகளில் பெரிய வணிகர்கள் முதல் சிறிய வணிகர்கள், சிறு,குறு வணிகர்கள் என பல்வேறு தரப்பட்ட வியாபாரிகளும் அந்தந்த சாலைகளில் தங்களின் கடைகளுக்கு எதிரே ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்ளது.  இதனை மதுராந்தகம் போக்குவரத்து காவலர்கள் சார்பில் பலமுறை எடுத்துக் கூறியும், ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை.  எனவே, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் மிகுந்த இடையூறாக இருக்கும் இந்த  ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மதுராந்தகம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில்,  இங்கு உள்ள நகரின் முக்கிய தெருக்களில் பெரிய, சிறிய கடைகள் உள்ளன. இதில் அனைத்து வியாபாரிகளும் தங்களின் கடைக்கு எதிரே மக்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். குறிப்பாக, கடைகளை ஒட்டிய பகுதிகளில் மக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளில், மக்கள் நடந்து செல்லாத வகையில் அப்பகுதிகளில் இரும்பு கிரில் கேட் அமைப்பது, என பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி பலர் தங்களின் கடைகளுக்கு உள்ளே வைத்து விற்பனை செய்ய கூடிய பொருட்களை, எதிரே சாலைகளில் அடுக்கி வைத்து மக்கள் நடமாடாத வண்ணம் செய்துள்ளனர். இதனால், முக்கிய நேரங்களில், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.

Related Stories: