திருட்டு பைக்கில் வந்து செல்போன் பறித்த 2 பேர் கைது

மொடக்குறிச்சி, ஜூன் .9:  ஈரோடு அடுத்த சோலார் அருகே உள்ள நகராட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (34) சிசிடிவி கேமரா பழுது நீக்கம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சேலம் செல்வதற்காக தனது வீட்டில் இருந்து பஸ் ஸ்டாப்பிற்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது  பின்னால் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் சுரேஷின் செல்போனை பறித்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மொடக்குறிச்சி அடுத்த 46புதூர் சுப்பராயவலசு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை கடையை திறந்தபோது கல்லாவில் இருந்த ரூ.2,500 ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் நேற்று லக்காபுரம் பரிசல்துறை சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சோலார் அடுத்த வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் முத்துக்குமார் (19), அதே பகுதியைச் சேரந்த கிருஷ்ணன் மகன் கோகுல் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.தீவிர விசாரணையில் இவர்கள் சுரேஷின் செல்போனை பறித்து சென்றதும், மளிகை கடையில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த மொடக்குறிச்சி போலீசார் இவர்களிடம் இருந்து செல்போன், மளிகை கடையில் திருடிய ரூ.2,500 ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். வழிபறி மற்றும் திருட்டிற்கு இவர்கள் பயன்படுத்திய பைக்கும் திருட்டு பைக் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Stories: