திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11,389க்கு அதிகபட்ச ஏலம்

திருவாரூர், ஜூன் 9: திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிக பட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11 ஆயிரத்து 389 விலை கிடைத்தது. திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடப்பாண்டிற்கான பருத்தி கொள்முதல் ஏலம் கடந்த 1ம் தேதி துவங்கியது. முதல் ஏலத்திலேயே அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்து 269ம், குறைந்த பட்சமாக ரூ.10 ஆயிரத்து 500ம் விலை கிடைத்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். கடந்தாண்டு இறுதி வரையில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் வரை மட்டுமே விலை கிடைத்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் இந்த விலை கிடைத்திருப்பதற்கு காரணம் நூல் விலை உயர்வு மற்றும் இறக்குமதி பருத்திக்கான செஸ் வரி உயர்வு போன்றவைதான் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11 ஆயிரத்து 389ம், குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 419ம், சராசரியாக ரூ.10 ஆயிரத்து 46ம் விலை கிடைத்ததாக விற்பனை கூடத்தின் செயலாளர் சரசு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி ஏலம் வாரம்தோறும் செவ்வாய்கிழமைகளில் திருவாரூர் மற்றும் பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், புதன்கிழமை குடவாசல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், வெள்ளிக்கிழமை வலங்கைமான் மற்றும் மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் நடைபெறுகிறது.

Related Stories: