திருமலைராயன்பட்டினம் கோயிலில் 5 ஆண்டுக்கு பின் பேழையிலிருந்து எழுந்தருளிய ஆயிரம் காளியம்மன்

காரைக்கால், ஜூன் 9: திருமலைராயன் பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பேழையிலிருந்து அம்மனை எழுந்தருளச் செய்யும் பூஜை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது.நேற்று முன்தினம் மதியம் ஆயிரம் மண் பானைகளில் பக்தர்கள் பொங்கல் வைத்து, கோயிலுக்கு கொண்டு வந்தனர். அன்றிரவு இரவு திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரர் கோயிலிலிருந்து ஆயிரங்காளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வரிசை எடுத்துச் செல்லும் வரிசை புறப்பாடு நடைபெற்றது. இதில் பழங்கள், இனிப்பு வகைகள், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஆயிரம் எண்ணிக்கையில் எடுத்து வரப்பட்டன. பொங்கல் மற்றும் இந்த வரிசைப் பொருட்கள் ஆயிரங்காளியம்மன் முன்பு வைத்து படைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அவருடன் நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் கலந்து கொண்டார். தொடர்ந்து நேற்று அதிகாலை அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் மூலம் அம்மனுக்கு பூஜை செய்யப்பட்ட பட்டு புடவை வழங்கப்பட்டது. இந்த அரிய நிகழ்வில் சென்னை,கோவை ,மதுரை,திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து வருகின்றனர். இன்று (9ம் தேதி) மட்டுமே பக்தர்கள் அம்மனை தரிசிக்க முடியும். இதற்கு அடுத்து ஐந்து வருடங்கள் கழித்து 2027ல் தான் மீண்டும் தரிசனம் செய்ய முடியும். பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் என இரு வரிசைகள் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் பக்தர்கள் வசதிக்கான பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: