கரூர் மாவட்டத்தை முதன்மையானயானதாக மாற்றுவதற்கு கலெக்டருக்கு அனைவரும் துணையாக இருந்து செயல்பட வேண்டும் கைத்தறி துணை ஆணையர் அறிவுறுத்தல்
கரூர், ஜூன். 7: கரூர் மாவட்டத்தை முதன்மையான மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட கலெக்டருக்கு அனைவரும் துணையாக இருந்து செயல்பட வேண்டும் என கைத்தறிதுறை ஆணையர் அறிவுறுத்தினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு கைத்தறி துறை ஆணையர் கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஸ் தலைமையில் பொதுப்பணித்துறையில் செயல்படுத்தி வரும் சிறப்பு தூர்வாரும் திட்டப் பணிகள் மற்றும் வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் மற்றும் துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கைத்தறி துணை ஆணையர் ராஜேஸ் கலந்து கொண்டு பேசியதாவது: கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ரூ. 285.50 லட்சம் மதிப்பில் 120.47 கிமீ தூரத்திற்கு 15 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் தூர்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு வசதியாக உடனடியாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, மழைக்காலங்களில் கிடைக்கும் மழை நீரானது வீணாகாமல் வழங்க, வாய்க்கால்கள் முறையாக தூர்வாரி, ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.சென்ற ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை தவிர்க்கும் வகையில் பணியை சிறப்பாக செய்து, தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.,
வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை, குறிப்பாக முதல்வரின் முகவரியில் இருந்து பெறப்பட்ட மனுக்கள், முதல்வரின் தனிப்பிரிவுகளில இருந்து வரும் மனுக்கள், கலெக்டரிடம் வழங்கப்படும் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி காலம் தாழ்த்தாமல் பணி மேற்கொள்ள வேண்டும். கரூர் மாவட்டத்தை முதன்மையான மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட கலெக்டருக்கு அனைவரும் துணையாக இருந்து செயல்பட வேண்டும் என்றார். தொடர்ந்து, கரூர் தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ் பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, குளித்தலை வட்டம், பொதுப்பணித்துறை மூலம் நங்கம் காட்டுவாரியினை தூர் வாரும் திட்டத்தில் முடிவுற்ற பணிகளை பார்வையிட்டு திட்டப்பணிகள் குறித்து கைத்தறி துணை ஆணையர் கேட்டறிந்தார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், திட்ட இயக்குநர் மந்திராச்சலம், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா, புஷ்பாதேவி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
