உலக சுற்றுச்சூழல் தினவிழா பொதுமக்கள் அதிக மரக்கன்றுகள் நடவேண்டும்: கலெக்டர் ஆர்த்தி பேச்சு

காஞ்சிபுரம்: சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று, உலக சுற்றுச்சூழல் தின விழா மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது, 2021ம் ஆண்டில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கான மாற்று பொருட்கள் குறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளி, மேல் நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்.சி பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடந்தன. அதில், வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். பின்னர், கலெக்டர் ஆர்த்தி பேசியதாவது:

உலக சுற்றுச்சூழல் தினத்தில், பொதுமக்களிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. நகரமயமாக்கல், தொழிற்பெருக்கம் மற்றும் நாகரிக மாற்றத்தினால், சுற்றுச்சூழல் மாசடைந்து, பூமியில் வாழ்கின்ற உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அரசு முயற்சிகளால் மட்டுமே சுற்றுச்சூழல் மாசுபடுவதை திறம்பட கட்டுப்படுத்த இயலாது என்பதால், பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது.இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும், அனைத்து அரசு அலுவலகங்களும் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வேண்டும்’ என்றார்.இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: